Wednesday, March 4, 2009
அந்த ஒரு நொடி...
அந்த ஒரு நொடி...
மனதின் ஆழத்தில் பதித்து வைத்த நொடி
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்
பசுமை போகாத நொடி
அந்த ஒரு நொடி...
உன்னை பார்த்த முதல் நொடி
உன்னிடம் பேசிய முதல் நொடி
நீ சிரித்த முதல் நொடி
கை பிடித்த முதல் நொடி
உன்னை அணைத்த முதல் நொடி
உயிர் சிலிர்த்த அந்த நொடி
எத்தனை எத்தனை நொடி
நான் சேர்த்து வைத்திருக்கும் கோடி நொடி
சருகாகி விழுந்தாலும் மறையாது இந்த நொடி
மண்ணில் உதிர்ந்தாலும் விதையாய் விழும்
மலையையும் பிளந்து விருக்ஷமாய் வரும்
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் சின்னமாய்...
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் அங்கமாய்...
Thursday, January 22, 2009
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன...
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம் பாதைகள் இணைந்து
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம் பயணத்தை துவக்கி
போன வேகம் தெரியவில்லை
வந்த களைப்பும் நமக்கு இல்லை
சோர்வே இல்லாமல் காதலிக்கிறோம்
அளவே இல்லாமல் நேசிக்கிறோம்
திரும்பி பார்த்து வியக்கிறோம்
ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன...
வருடங்களுக்கு தான் இறப்பு
வாழ்க்கைக்கு?
ஒவ்வொரு நாளும் வாழ்வோம்
ஒவ்வொரு நொடியும் ரசிப்போம்
இருக்கும் வரை இணைந்து...
இறக்கும் வரை இணைந்து...
Wednesday, January 21, 2009
நீ...
பஞ்ச பூதங்களில் யாவும் அடக்கம்...
நான் மட்டும் உன்னில்
ஈசனின் இடப்பாகமாம் ஈஸ்வரி...
நீயோ என் அங்கமெல்லாம்
நீயின்றி நானில்லை
உன் நினைவின்றி நொடியில்லை
வாழ்கையெனும் போர்க்களத்தில்
நீ பக்கம் இருந்தால் பயமும் இல்லை...
எனை தீண்டும் காற்றாய் நீ...
எனை தாங்கும் பூமியாய் நீ..
எனை சுடும் தீயாய் நீ...
அதை ஆற்றும் நீராய் நீ...
யாதும் நீ...
என்னவளே...
என் தொடு வானம் நீ...
என் பஞ்ச பூதம் நீ!!!
Friday, January 16, 2009
சின்னஞ்சிறிய கவிதைகள் - 1
மாற்றம்...
மாற்றம் நிரந்தரமென்றால்
மரணத்தில் ஏன் மாற்றம் இல்லை?
மாற்றம் நிச்சயம்
ஆனால் மரணம் மட்டுமே நிரந்தரம்...
மக்கள்
மக்கள் மாக்கள் ஆனதேன்?
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு ஜீவனம்
இரையை துரத்துவது போல் பணத்தை...
வந்த பாதையில் வெளிச்சமும் இல்லை
திரும்பி போக வழியும் இல்லை
வானவேடிக்கை
கூரையில் ஓட்டைகள்...
வீட்டிலிருந்தே எனக்கு தெரிந்தது வானவேடிக்கை... Thursday, January 15, 2009
இன்று பொங்கல்...
இன்று பொங்கல்...
ஊரெல்லாம் கொண்டாட்டம்...
தெருவெங்கும் உற்சாகம்...
கரும்பு நட்டு தோரணம் கட்டி
வீட்டின் வாசலில் கோலமிட்டு
மண் பானையில் பொங்கலிட்டு
தெருவே கூட
பொங்கியதும் கூவுவோம்
பொங்கலோ பொங்கலென்று...
எத்தனை சுகம் இந்த கிராமத்து பொங்கல்
நகரத்திலோ நரகம்...
தெரு வண்டியில் வரும் கரும்பு
காஸ் அடுப்பு, அதன் மேல் குக்கர்
அதனுள் பொங்கல், அதையும் சுற்றி ஒரு மஞ்சள் குலை
மனசுக்குள்ளேயே கூவுகிறோம்
பொங்கலோ பொங்கலென்று...
சத்தம் போட்டால் பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவானே!!!
இனி பக்கத்து வீட்டில்
ஒன்றாய் பார்க்க ஒலியும் ஒளியும் இல்லை
ஒன்று கூட உறவும் இல்லை
அங்கு தொலைக்காட்சி பெட்டி உள்ளது
ஆனால் உறவு தொல்லைகாட்சி ஆகிவிட்டதே...
வாழ்கையில் வேகம் கூடிவிட்டது
ஆனால் வாழ்வின் சுகங்கள் காணாமலே போய்விட்டது
Subscribe to:
Posts (Atom)