Saturday, May 7, 2016

தாயுமாய் தான்!!!
நினைவிருகிறது
நீ கருவுற்ற அந்த நொடி
உயிர் வரை சிலிர்த்த அந்த நொடி

தாயாய் உன்னை பார்த்த போது
கண்கள் நிறைந்ததடி

ஊண் உருக்கி உயிர் உருக்கி
கருவில் சுமந்தாய்
ரணமாய் உடல் ஆனபோதும்
கவசமாய் காத்தாய்


ரத்தத்தை பாலாக்கி
இரவு பகல் பாராமல்
நீ பட்ட பாடு
அம்மாமா...
உன் உடலின் வலி
என் உயிரின் வலி

8 அகவைகள்
முடியும் தருணம்
இன்னும் அடை காக்க நீ

தாயாய் நீ காப்பதை
பார்க்கும் போது
ஒரு முறை உன் கருவாய்
இருக்க ஆசை

காலம் எனும் சக்கரத்தில்
ஓடும் நம் வாழ்க்கை
வருடங்கள் உருண்டோடிவிடும்
இன்றும் உன் கை பிடித்திருக்கிறேன்
என் தாரமாய்  மட்டும்மல்ல
தாயுமாய்  தான்!!!


Tuesday, April 26, 2016

எனதாய் அடைந்தேன்விழிகளில் விழுந்தேன்
உயிரில் கரைந்தேன்
நினைவினில் மிதந்தேன்
கவிதையாய் வரைந்தேன்

கவிதையாய் வரைந்தேன்
 நிதம் உன்னை நினைந்தேன்
கண்களை மூடி
தவமாய் கிடந்தேன்

தவமாய் கிடந்தேன்
வரமாய் கிடைத்தாய்
மனதினில் புதைத்தேன்
கருவாய் சுமந்தேன்

கருவாய் சுமந்தேன்
உயிராய் வளர்த்தேன்
என்னவளே உன்னை
எனதாய் அடைந்தேன் 

Monday, April 25, 2016

உன்னில்...
உன் பார்வையில் காதல் கொண்டேன்
உன் ஸ்பரிசத்தில் மோகம் கொண்டேன்
உன் கண்களால் காமம் கொண்டேன்
உன்னை சேரும் வரை தாபம் கொண்டேன்

உன் சேர்க்கையில் யோகம் கண்டேன்
உன் நோக்கினில் போகம் கண்டேன்
உன் செய்கையில் வேகம் கண்டேன்
உன் எண்ணத்தில் விவேகம் கண்டேன்

உன் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு ஒலியிலும்
எண்ணற்ற எண்ணற்ற
காரணம் கண்டேன்

என்றும் உன்னுடன் நானே நிற்பேன்
உன் வெற்றிக்கு துணையாய் என்றும் நிற்பேன்
கனவிலும் நினைவிலும் அருகில் நிற்பேன்
நித்தமும் பிரியாமல் காவல் நிற்பேன்


Saturday, April 23, 2016

மீண்டும் உனக்காக...எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் எழுதி
எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் உருகி

நினைவுகள் நிறைந்திருந்தாலும்
ஏனோ பேனாவை கை தொடவில்லை

தவறு தான் என் கண்ணே
மனதில் உள்ளதை வார்த்தையாய் வார்காவிட்டால்
நினைத்துத்தான் என்ன பயன்

இதோ மீண்டும் உனக்காக
ஒரு காதல் காவியம்
நம் காதல் காவியம்

13 அகவைகள் கடந்து வந்த
நம் காதல் சாசனம்

இப்படிக்கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்
என்னை இப்படி கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்

ஒவ்வொரு நொடியும் உன் காதலால் வாழ்கிறேன்
ஒவ்வொரு கணமும் உன் காதலால் கரைகிறேன்


உன் பிறந்தநாள் இன்று

நம் காதல் மீண்டும் பிறந்ததாய் உரைக்கிறேன்

பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
உன் பல கோடி ஆசைகள் நிறைவேறவேண்டும்
வழித்துணையாய் நான் இருப்பேன்
வழிநெடுக்க நான் சுமப்பேன்
உன்னை, மனத்திலும்
உன் சிரிப்பை, கண்ணிலும்
உன் வலியை, என் முழுவதும்

என் கண்ணே கண்மணியே
முத்தே முத்தாரமே
என் கவிதையின் கருவே
செல்லமாய் உன்னை கொஞ்சி
உன்னுடன் விளையாட மனம் விரும்புதே
என் உயிரின் ஆதாரமே
உன்னால் நான் வாழ்கிறேன்... நிதமும் நித்தமும் 

Friday, April 25, 2014

இயற்கையின் நியதி... வாழ்வின் விதி...

களைத்து போய் விட்டேன்
களை இழந்து கலை இழந்து
கலைந்தும் போய் விட்டேன்

ஒவ்வொரு அடியும் சம்மட்டியால்
முதுகில் நூறு முகத்தில் நூறு
அடியின் வலி தான் தெரியும் முன்னே
அடுத்த அடியும் விழுகிறதே

சிரிக்கத்தான் நினைக்கிறன்
அறியாமல் அழுகிறேன்
எதிர்க்க தான் முயல்கிறேன்
ஒடிந்தே போகிறேன்

அடுத்த அடிதான் வைக்கும் முன்னே
அடித்தே நொறுக்கும் காரணம் என்ன ?

தெளிவை தேடி ஓடும்போது
நொடியில் வந்தது அறிவில் ஞானம்
புது மனிதனாய் பிறந்து விட்டேன்
விட்டதை பிடிக்க எத்தனானேன்

அத்தனையும் நன்மைக்கென நினைக்கும் நெஞ்சம்
போராடி பார்க்க தான் துடிக்கிறதே
படித்த புத்தகமும் பாடமும்  சேர்ந்து
வழித்துணை தான் ஆகியதே

தோல்வியின் வலியதை உணர்ந்தவன் மட்டுமே
வெற்றின் சுவையை உணருகிறான்
வெற்றியின் சுவையை உணரும் போது
வாழ்கையின் அர்த்தம் உணருகிறான்

இறக்கம் இல்லாத மனிதன் இல்லை
எற்றம் காணாத வாழ்க்கை இல்லை
விழுவதும் எழுவதும் இயற்கையின் நியதி
உணர்ந்து விட்டேன் இந்த வாழ்வின் விதி

மோதி பார்க்க தயாராகி நிற்கிறேன்
மலையையும் குடைய எத்தமாய் இருக்கிறேன்
அலைகடல் தாண்டியும் வெற்றியை தேட
திட் டத்துடன் தான் இறங்குகிறேன்

பராசக்தி !!! உன் சக்தி கொடு
பராசக்தி !!! வெல்ல யுக்தி கொடு
பராசக்தி !!! பராசக்தி !!! பராசக்தி !!!

Thursday, April 24, 2014

உனக்கென ஒரு கவிதை

உனக்கென ஒரு கவிதை
நீண்ட நாட்களுக்கு பிறகு
உனக்கென ஒரு கவிதை

ம்ம்ம்
கவிதை
வாழ்க்கையின் ஓட்டத்தில்
ஓட்டத்தின் வேகத்தில்
வேகத்தின் கவனத்தில்
கவனமின்றி மறந்து விட்ட பலவற்றில் ஒன்று

இன்று உன் பிறந்தநாள் என்றதும் மறுபடியும்...
நொடி பொழுது கூட யோசிக்காமல் மறுபடியும்
தடை தாண்டி மடை தாண்டி வரும் கவிதை
உனக்கென ஒரு கவிதை

வருடங்களின் கணக்குகளை நான் மறந்து கூட விட்டேன்
அனால் இன்றும்...
நொடிப்பொழுதும் மாறாத அதே காதலுடன்
இம்மியும் மறையாத அதே நேசத்துடன்

இத்தனை வருடத்தில் எத்தனை சண்டைகள்
சண்டைகள் யாவும் ஊடலாய் மறைய
அத்தனை அத்தனை காதல் நம்மிடம்

மாறாத நம் காதல் குறையாத நம் நட்பு
ஊரார் கண் பட ஊற்றார் சொல் பட
அத்தனை அத்தனை காதல் நம்மிடம்

வாழ்ந்த  வாழ்க்கை போதாது எனக்கு
இன்னும் சில நூறு ஆண்டுகள் வேண்டும் உன்னுடன்
வேண்டிக்கொள்கிறேன்
இருக்கின்ற  கடவுளிடம்... இல்லாத கடவுளிடம்

உனக்கென ஒரு கவிதை
நீண்ட நாட்களுக்கு பிறகு
உனக்கென ஒரு கவிதை


Thursday, September 29, 2011

தேடல்...

எதை தேடுகிறேன் ?
எதை தொலைத்தேன் தேடுவதர்க்கு ?
எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்து விட்ட உணர்வு
நெஞ்சுக்குழியின்  உள்ளே ஏதோ பிசைவு 
மீண்டும் தேடுகிறேன் 
இந்த முறை எதை தொலைத்தேன் என்று...