Friday, April 25, 2014

இயற்கையின் நியதி... வாழ்வின் விதி...

களைத்து போய் விட்டேன்
களை இழந்து கலை இழந்து
கலைந்தும் போய் விட்டேன்

ஒவ்வொரு அடியும் சம்மட்டியால்
முதுகில் நூறு முகத்தில் நூறு
அடியின் வலி தான் தெரியும் முன்னே
அடுத்த அடியும் விழுகிறதே

சிரிக்கத்தான் நினைக்கிறன்
அறியாமல் அழுகிறேன்
எதிர்க்க தான் முயல்கிறேன்
ஒடிந்தே போகிறேன்

அடுத்த அடிதான் வைக்கும் முன்னே
அடித்தே நொறுக்கும் காரணம் என்ன ?

தெளிவை தேடி ஓடும்போது
நொடியில் வந்தது அறிவில் ஞானம்
புது மனிதனாய் பிறந்து விட்டேன்
விட்டதை பிடிக்க எத்தனானேன்

அத்தனையும் நன்மைக்கென நினைக்கும் நெஞ்சம்
போராடி பார்க்க தான் துடிக்கிறதே
படித்த புத்தகமும் பாடமும்  சேர்ந்து
வழித்துணை தான் ஆகியதே

தோல்வியின் வலியதை உணர்ந்தவன் மட்டுமே
வெற்றின் சுவையை உணருகிறான்
வெற்றியின் சுவையை உணரும் போது
வாழ்கையின் அர்த்தம் உணருகிறான்

இறக்கம் இல்லாத மனிதன் இல்லை
எற்றம் காணாத வாழ்க்கை இல்லை
விழுவதும் எழுவதும் இயற்கையின் நியதி
உணர்ந்து விட்டேன் இந்த வாழ்வின் விதி

மோதி பார்க்க தயாராகி நிற்கிறேன்
மலையையும் குடைய எத்தமாய் இருக்கிறேன்
அலைகடல் தாண்டியும் வெற்றியை தேட
திட் டத்துடன் தான் இறங்குகிறேன்

பராசக்தி !!! உன் சக்தி கொடு
பராசக்தி !!! வெல்ல யுக்தி கொடு
பராசக்தி !!! பராசக்தி !!! பராசக்தி !!!





Thursday, September 29, 2011

தேடல்...

எதை தேடுகிறேன் ?
எதை தொலைத்தேன் தேடுவதர்க்கு ?
எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்து விட்ட உணர்வு
நெஞ்சுக்குழியின்  உள்ளே ஏதோ பிசைவு 
மீண்டும் தேடுகிறேன் 
இந்த முறை எதை தொலைத்தேன் என்று...

Friday, February 26, 2010

7 ஆண்டுகள் கடந்தும்...

ஆசை அறுவது நாள்
மோகம் முப்பது நாள்...
இப்படியொரு கெடு பலரின் காதலுக்கு...
நம் காதல் மட்டும் இதில் விதி விலக்கு!!!

வருடங்கள் ஓட ஓட
வயதை போல் நம் காதலும் வளரத்தான் செய்கிறது!!!

வருடங்கள் ஒவ்வொன்றும் கருகினாலும்
நம் காதலின் கரு மட்டும் சிதையாமல்...

நம் காதலின் விதைகள் மட்டும் எப்படியோ சாகாவரம் பெற்று விட்டன!!!

Wednesday, March 4, 2009

அந்த ஒரு நொடி...


அந்த ஒரு நொடி...
மனதின் ஆழத்தில் பதித்து வைத்த நொடி
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்
பசுமை போகாத நொடி
அந்த ஒரு நொடி...

உன்னை பார்த்த முதல் நொடி
உன்னிடம் பேசிய முதல் நொடி
நீ சிரித்த முதல் நொடி
கை பிடித்த முதல் நொடி
உன்னை அணைத்த முதல் நொடி
உயிர் சிலிர்த்த அந்த நொடி
எத்தனை எத்தனை நொடி
நான் சேர்த்து வைத்திருக்கும் கோடி நொடி

சருகாகி விழுந்தாலும் மறையாது இந்த நொடி
மண்ணில் உதிர்ந்தாலும் விதையாய் விழும்
மலையையும் பிளந்து விருக்ஷமாய் வரும்
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் சின்னமாய்...
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் அங்கமாய்...


Thursday, January 22, 2009

ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன...


ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம் பாதைகள் இணைந்து
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம் பயணத்தை துவக்கி

போன வேகம் தெரியவில்லை
வந்த களைப்பும் நமக்கு இல்லை
சோர்வே இல்லாமல் காதலிக்கிறோம்
அளவே இல்லாமல் நேசிக்கிறோம்
திரும்பி பார்த்து வியக்கிறோம்
ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன...

வருடங்களுக்கு தான் இறப்பு
வாழ்க்கைக்கு?
ஒவ்வொரு நாளும் வாழ்வோம்
ஒவ்வொரு நொடியும் ரசிப்போம்
இருக்கும் வரை இணைந்து...
இறக்கும் வரை இணைந்து...


Wednesday, January 21, 2009

நீ...


பஞ்ச பூதங்களில் யாவும் அடக்கம்...
நான் மட்டும் உன்னில்
ஈசனின் இடப்பாகமாம் ஈஸ்வரி...
நீயோ என் அங்கமெல்லாம்

நீயின்றி நானில்லை
உன் நினைவின்றி நொடியில்லை
வாழ்கையெனும் போர்க்களத்தில்
நீ பக்கம் இருந்தால் பயமும் இல்லை...

எனை தீண்டும் காற்றாய் நீ...
எனை தாங்கும் பூமியாய் நீ..
எனை சுடும் தீயாய் நீ...
அதை ஆற்றும் நீராய் நீ...
யாதும் நீ...
என்னவளே...
என் தொடு வானம் நீ...
என் பஞ்ச பூதம் நீ!!!

Friday, January 16, 2009

சின்னஞ்சிறிய கவிதைகள் - 1

மாற்றம்...
மாற்றம் நிரந்தரமென்றால்
மரணத்தில் ஏன் மாற்றம் இல்லை?
மாற்றம் நிச்சயம்
ஆனால் மரணம் மட்டுமே நிரந்தரம்...


மக்கள்
மக்கள் மாக்கள் ஆனதேன்?
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு ஜீவனம்
இரையை துரத்துவது போல் பணத்தை...
வந்த பாதையில் வெளிச்சமும் இல்லை
திரும்பி போக வழியும் இல்லை


வானவேடிக்கை
கூரையில் ஓட்டைகள்...
வீட்டிலிருந்தே எனக்கு தெரிந்தது வானவேடிக்கை...