Tuesday, April 26, 2016

எனதாய் அடைந்தேன்



விழிகளில் விழுந்தேன்
உயிரில் கரைந்தேன்
நினைவினில் மிதந்தேன்
கவிதையாய் வரைந்தேன்

கவிதையாய் வரைந்தேன்
 நிதம் உன்னை நினைந்தேன்
கண்களை மூடி
தவமாய் கிடந்தேன்

தவமாய் கிடந்தேன்
வரமாய் கிடைத்தாய்
மனதினில் புதைத்தேன்
கருவாய் சுமந்தேன்

கருவாய் சுமந்தேன்
உயிராய் வளர்த்தேன்
என்னவளே உன்னை
எனதாய் அடைந்தேன் 

Monday, April 25, 2016

உன்னில்...




உன் பார்வையில் காதல் கொண்டேன்
உன் ஸ்பரிசத்தில் மோகம் கொண்டேன்
உன் கண்களால் காமம் கொண்டேன்
உன்னை சேரும் வரை தாபம் கொண்டேன்

உன் சேர்க்கையில் யோகம் கண்டேன்
உன் நோக்கினில் போகம் கண்டேன்
உன் செய்கையில் வேகம் கண்டேன்
உன் எண்ணத்தில் விவேகம் கண்டேன்

உன் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு ஒலியிலும்
எண்ணற்ற எண்ணற்ற
காரணம் கண்டேன்

என்றும் உன்னுடன் நானே நிற்பேன்
உன் வெற்றிக்கு துணையாய் என்றும் நிற்பேன்
கனவிலும் நினைவிலும் அருகில் நிற்பேன்
நித்தமும் பிரியாமல் காவல் நிற்பேன்


Saturday, April 23, 2016

மீண்டும் உனக்காக...



எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் எழுதி
எத்தனை எத்தனை நாட்கள்
உனக்காக நான் உருகி

நினைவுகள் நிறைந்திருந்தாலும்
ஏனோ பேனாவை கை தொடவில்லை

தவறு தான் என் கண்ணே
மனதில் உள்ளதை வார்த்தையாய் வார்காவிட்டால்
நினைத்துத்தான் என்ன பயன்

இதோ மீண்டும் உனக்காக
ஒரு காதல் காவியம்
நம் காதல் காவியம்

13 அகவைகள் கடந்து வந்த
நம் காதல் சாசனம்

இப்படிக்கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்
என்னை இப்படி கூட காதலிக்க முடியும் என
உன்னை பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்

ஒவ்வொரு நொடியும் உன் காதலால் வாழ்கிறேன்
ஒவ்வொரு கணமும் உன் காதலால் கரைகிறேன்


உன் பிறந்தநாள் இன்று

நம் காதல் மீண்டும் பிறந்ததாய் உரைக்கிறேன்

பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
உன் பல கோடி ஆசைகள் நிறைவேறவேண்டும்
வழித்துணையாய் நான் இருப்பேன்
வழிநெடுக்க நான் சுமப்பேன்
உன்னை, மனத்திலும்
உன் சிரிப்பை, கண்ணிலும்
உன் வலியை, என் முழுவதும்

என் கண்ணே கண்மணியே
முத்தே முத்தாரமே
என் கவிதையின் கருவே
செல்லமாய் உன்னை கொஞ்சி
உன்னுடன் விளையாட மனம் விரும்புதே
என் உயிரின் ஆதாரமே
உன்னால் நான் வாழ்கிறேன்... நிதமும் நித்தமும் 

Friday, April 25, 2014

இயற்கையின் நியதி... வாழ்வின் விதி...

களைத்து போய் விட்டேன்
களை இழந்து கலை இழந்து
கலைந்தும் போய் விட்டேன்

ஒவ்வொரு அடியும் சம்மட்டியால்
முதுகில் நூறு முகத்தில் நூறு
அடியின் வலி தான் தெரியும் முன்னே
அடுத்த அடியும் விழுகிறதே

சிரிக்கத்தான் நினைக்கிறன்
அறியாமல் அழுகிறேன்
எதிர்க்க தான் முயல்கிறேன்
ஒடிந்தே போகிறேன்

அடுத்த அடிதான் வைக்கும் முன்னே
அடித்தே நொறுக்கும் காரணம் என்ன ?

தெளிவை தேடி ஓடும்போது
நொடியில் வந்தது அறிவில் ஞானம்
புது மனிதனாய் பிறந்து விட்டேன்
விட்டதை பிடிக்க எத்தனானேன்

அத்தனையும் நன்மைக்கென நினைக்கும் நெஞ்சம்
போராடி பார்க்க தான் துடிக்கிறதே
படித்த புத்தகமும் பாடமும்  சேர்ந்து
வழித்துணை தான் ஆகியதே

தோல்வியின் வலியதை உணர்ந்தவன் மட்டுமே
வெற்றின் சுவையை உணருகிறான்
வெற்றியின் சுவையை உணரும் போது
வாழ்கையின் அர்த்தம் உணருகிறான்

இறக்கம் இல்லாத மனிதன் இல்லை
எற்றம் காணாத வாழ்க்கை இல்லை
விழுவதும் எழுவதும் இயற்கையின் நியதி
உணர்ந்து விட்டேன் இந்த வாழ்வின் விதி

மோதி பார்க்க தயாராகி நிற்கிறேன்
மலையையும் குடைய எத்தமாய் இருக்கிறேன்
அலைகடல் தாண்டியும் வெற்றியை தேட
திட் டத்துடன் தான் இறங்குகிறேன்

பராசக்தி !!! உன் சக்தி கொடு
பராசக்தி !!! வெல்ல யுக்தி கொடு
பராசக்தி !!! பராசக்தி !!! பராசக்தி !!!





Thursday, September 29, 2011

தேடல்...

எதை தேடுகிறேன் ?
எதை தொலைத்தேன் தேடுவதர்க்கு ?
எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்து விட்ட உணர்வு
நெஞ்சுக்குழியின்  உள்ளே ஏதோ பிசைவு 
மீண்டும் தேடுகிறேன் 
இந்த முறை எதை தொலைத்தேன் என்று...

Friday, February 26, 2010

7 ஆண்டுகள் கடந்தும்...

ஆசை அறுவது நாள்
மோகம் முப்பது நாள்...
இப்படியொரு கெடு பலரின் காதலுக்கு...
நம் காதல் மட்டும் இதில் விதி விலக்கு!!!

வருடங்கள் ஓட ஓட
வயதை போல் நம் காதலும் வளரத்தான் செய்கிறது!!!

வருடங்கள் ஒவ்வொன்றும் கருகினாலும்
நம் காதலின் கரு மட்டும் சிதையாமல்...

நம் காதலின் விதைகள் மட்டும் எப்படியோ சாகாவரம் பெற்று விட்டன!!!

Wednesday, March 4, 2009

அந்த ஒரு நொடி...


அந்த ஒரு நொடி...
மனதின் ஆழத்தில் பதித்து வைத்த நொடி
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்
பசுமை போகாத நொடி
அந்த ஒரு நொடி...

உன்னை பார்த்த முதல் நொடி
உன்னிடம் பேசிய முதல் நொடி
நீ சிரித்த முதல் நொடி
கை பிடித்த முதல் நொடி
உன்னை அணைத்த முதல் நொடி
உயிர் சிலிர்த்த அந்த நொடி
எத்தனை எத்தனை நொடி
நான் சேர்த்து வைத்திருக்கும் கோடி நொடி

சருகாகி விழுந்தாலும் மறையாது இந்த நொடி
மண்ணில் உதிர்ந்தாலும் விதையாய் விழும்
மலையையும் பிளந்து விருக்ஷமாய் வரும்
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் சின்னமாய்...
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் அங்கமாய்...